உலக சாதனை படைத்த 21 வயது வீராங்கனை..
டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 51.46 செக்கன்களில் கடந்து புதிய உலக சாதனையுடன் அமெரிக்காவின் சிட்னி மெக்லோக்லின் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியை 51.90 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனையை முறியடித்த 21 வயதான சிட்னி, மீண்டும் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
அத்துடன், 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் உலகிலேயே வேகமான வீராங்கனை என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.
இதனிடையே, பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டலில் நடப்பு உலக சம்பியனும், 2016 ரியோ ஒலிம்பிக்கில தங்கப் பதக்கம் வென்றவருமான அமெரிக்காவின் டலிலாஹ் முஹம்மட் போட்டியை 51.58 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
எனவே, சிட்னி கடந்த ஜுன் மாதம் நிலைநாட்டிய உலக சாதனையை டலிலாஹ் முஹமட்டும் இந்தப் போட்டியில் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஐரோப்பிய சாதனையுடன் நெதர்லாந்து வீராங்கனை பெம்கி போல் (52.03 செக்.) வெண்கபலப்ப பதக்கம் வென்றார்.
இதுஇவ்வாறிருக்க டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது இரு பாலாருக்குமான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகள் அடுத்தடுத்த தினங்களில் நிலைநாட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நோர்வே வீரர் கார்ஸ்டன் வோர்ஹோல்ம், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.