ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு ரூ.10,600 கோடி அபராத நோட்டீஸ்
அந்நியச் செலாவணி பரிமாற்ற சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக ஃபிளிப்காா்ட் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனா்களுக்கு எதிராக ரூ.10,600 கோடிக்கான அபராத நோட்டீஸை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி பரிமாற்ற சட்டத்தை மீறி செயல்பட்டதாக கடந்த மாதம் 10 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஃபிளிப்காா்ட் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனா்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் உள்ளிட்டோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழான பல்வேறு பிரிவுகளில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியது தொடா்பாக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, ரூ.10,600 கோடிக்கான அபராத நோட்டீஸை ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ஃபிளிப்காா்ட் தெரிவித்துள்ளது.