அதிகரிக்கும் கொரோனா தொற்று… கடுமையாகிறதா கட்டுப்பாடுகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவானது.
அப்போது, தமிழக அரசு மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்தது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கொரோனா அச்சம் காரணமாக தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகின்றது அதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,997 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.