பிச்சைக்காரர்களுக்கு தொழிற் பயிற்சி .. 60 பேருக்கு வேலை அளித்து ராஜஸ்தான் அரசு புதுமை!
பிச்சைக்காரர்கள் இல்லா மாநிலம் உருவாக்கும் நோக்கில் ராஜஸ்தான் அரசு, சுமார் 60 பிச்சைக்காரர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சியும் அளித்து, பணி வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ராஜஸ்தான் அரசு பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்க ‘கௌரவமான வாழ்வு’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ஓராண்டு தொழிற்சி பயிற்சி கொடுக்கப்பட்டு, அந்த பயிற்சிக்கு ஏற்ப நிரந்தரமான தொழில் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகம் மற்றும் சோபான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியும் இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளது. முதற்கட்டமாக, 60 பிச்சைக்காரர்களுக்கு, ‘கௌரவமான வாழ்வு’ திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அவர்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் நீரஜ் குமார், பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு திட்டம் குறித்து பேசும்போது, மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க அரசு முயற்சி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் கனவுத் திட்டம் எனக் கூறியுள்ள அவர், பிச்சை எடுத்து பிழைப்பதில் இருந்து அவர்களை விடுவித்து கவுரவமான வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய இலக்கு என விளக்கம் கொடுத்துள்ளார்.
முதல் கட்டமாக 100 பேரை தேர்தெடுத்து, ‘கௌரவமான வாழ்வு’ திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது 60 பேர் முழுமையாக பயிற்சியை நிறைவு செய்திருப்பதாக நீரஜ் குமார் தெரிவித்தார். எஞ்சியிருப்பவர்கள் விரைவில் பயிற்சியை நிறைவு செய்வார்கள் எனவும் கூறினார். மாநில அரசின் பயிற்சியை முடித்த சிலர் ஜெய்ப்பூர் பகுதியில் இருக்கும் ரெட் பெப்பர்ஸ் என்ற ரெஸ்டாரண்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களை பணிக்கு நியமித்துள்ள ரெஸ்ட்ராண்டின் உரிமையாளர் பேசும்போது, இந்த வேலையில் முழுமையாக அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு சில காலம் ஆகும் எனக் கூறினார். தங்களுக்கான பணியை அவர்கள் புரிந்து செய்யத்தொடங்கும்போது நிச்சயம் இந்த திட்டம் வெற்றிபெற்றதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரெட் பெப்பர்ஸ் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் ராஜீவ் கம்பானி பேசும்போது, ” கௌரவமான வாழ்வு திட்டத்தின் கீழ் 12 பேரை எங்கள் ரெஸ்டாரண்டில் பணியமர்த்தியுள்ளோம். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் 15 முதல் 20 நாட்களுக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சக ஊழியர்களுடன் சேர்ந்து பழகும்போது மகிழ்ச்சியாக பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு முதலில் மனநலப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர், வாழ்க்கை குறித்த புரிதல், உழைத்து வாழ்வதன் நோக்கம் ஆகியவை குறித்து படிப்படியாக எடுத்துரைக்கப்பட்டு, கடைசியாக நேரடியாக தொழிற் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ராஜஸ்தான் அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.