கடந்த 24 மணிநேரத்தில் 256 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 256 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுன், 5 மரணங்களும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்றாவது கொவிட் அலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 9043 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது அலையின் தாக்கத்தினால் 124 பேர் மரணமடைந்துள்ளனர், அரசாங்கம் முன்னெடுத்துவரும் அறிகுறியற்றவர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கும்போதே அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
டெல்டா திரிபின் தாக்கம் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏற்படவில்லை. பொதுமக்கள் தமது சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே இவ்வாறான தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.