நள்ளிரவில் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் கொள்ளையர்கள்.. அதிரவைத்த சிசிடிவி காட்சிகள் – இருவர் கைது
மயிலாடுதுறையில் தொடர்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். செம்பனார்கோவில் காவல் சரகம் விளநகரில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பார்வையில், குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர். கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில், பூட்டிய வீட்டை நோட்டமிடும் கொள்ளையர்கள் நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் டார்ச்லைட் உதவியுடன் வீட்டில் யாராவது இருக்கிறார்களா என ஜன்னல் வழியாக உறுதிசெய்து கொள்ளையில் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடந்த பல்வேறு இடங்களில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் மயிலாடுதுறை கல்லறை தோப்புத் தெருவை சேர்ந்த மருது என்கிற விஜயபாஸ்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகம் (44) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 256 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ எடை கொண்ட இரண்டு வெள்ளி குத்து விளக்குகள் திருட்டுக்கு பயன்படுத்திய பல்சர் வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றது.