வெள்ளத்தில் வீடு மூழ்கியதால் 11 மாத குழந்தையுடன் பக்கத்து வீட்டு மாடியில் தஞ்சமடைந்த குடும்பம்
பருவமழையானது நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. பல மாநிலங்களில் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பருவமழை சீர்குலைத்து வருகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தங்களது வசிப்பிடம் மற்றும் சுற்றுப்புறம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதன் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பருவமழையுடன் சேர்ந்து அவ்வப்போது மேக வெடிப்பு நிகழ்வுகள் காரணமாக மழை கொட்டி தீர்ப்பதால் அம்மாநில ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4 லட்சம் ஹெக்டர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே மேற்குவங்கத்தின் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் கட்டால் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பம், 11 மாத குழந்தையுடன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தங்கள் வீடு தண்ணீரில் மூழ்யிருப்பதாக கூறிய அந்த குடும்பத்தினர், கை குழந்தையுடன் மிகவும் சிரமப்பட்டதாகவும் எனவே வேறு வழியின்றி கடந்த 4 நாட்களாக குடும்பத்துடன் பக்கத்து வீட்டு மாடியில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருக்கின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பம் கட்டால் நகரத்தின் வார்டு எண் 6-ல் வசிக்கிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்திற்கு இடையிலும் குழந்தைக்கு இந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த தடுப்பூசியை தவறாமல் பெறுவதற்கு, படகில் பயணம் செய்து குழந்தையை மருவத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேற்குவங்க நகரங்கள் வழியே செல்லும் ஆற்றின் நீர்மட்டம் தொடர் மழையால் உயர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சாலைகளை மூழ்கடித்த வெள்ளம் தற்போது ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்துள்ளது.
மாவட்டத்தின் பல இடங்களில் இடுப்பளவு வெள்ளம் ஓடுவதால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநில அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மாவட்டத்தின் 172 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 7 நகராட்சிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.