வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல்: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!
மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுடுநீர் கலந்த சாம்பல் கழிவு வெளியேறுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவு, ராட்சத இரும்பு குழாய்கள் மூலம். 8 கி.மீ. தொலைவில் உள்ள ஊரணம்பேடு, செப்பாக்கம் உள்ளிட்டபகுதிகளில் 1,126 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள சாம்பல் குளத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இந்த ராட்சத குழாய்களில் அவ்வப்போது கசிவு ஏற்படுவதால் அதிகளவில் சுடுநீர் சாம்பல் கழிவு வெளியேறி பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாகுகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட உடைப்பு காரணமாக அந்த பகுதியில் சாம்பல் வெள்ளம் ஓடுகிறது. அதி வேகமாக குழாய் உடைப்பு ஏற்பட்டு, சுடுநீர் கலந்த சாம்பல் கழிவு வெளியேறி வருகிறது.
இந்த காட்சிகளை பார்க்கும் போது அப்பகுதியில் மீன் வளம் பாதிப்பு இயற்கை சூழல் பாதிப்பு குறித்து அரசு கவலையற்ற நிலையை உணர்த்துவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றன.