தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு – 28 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு 2,000-த்தை நெருங்கிய நிலையிலையே தினமும் பதிவாகிவருகிறது.
அந்தவகையில், இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,59,627 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,807 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,20,584 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,317 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டுத் தனிமையையும் சேர்த்து தற்போது கொரோனா பாதித்து 20,407 பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று மட்டும் கோயம்புத்தூரில் 241 பேருக்கும், சென்னையில் 187 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.