தப்பிய ஊடகவியலாளரைத் தேடி , கூரையை பிரித்துக் கொண்டு இறங்கிய போலீஸ் ..!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக , களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , பிரபல ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய, அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் , காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையை விட்டு தப்பிச்சென்ற கீர்த்தி வர்ணகுலசூரிய, கொஸ்வத்த, தலங்கமவில் உள்ள பத்திரிக்கையாளர் கிராமமான ரிச்சர்ட் டி சோய்சா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கதவு மற்றும் ஜன்னலை பூட்டிக் கொண்டு , தொலைபேசி தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு இருந்துள்ளார்.
கீர்த்தி வர்ணகுலசூரிய, அவரது வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை வைத்து அங்கு சென்ற போலீசார் , அவரது வீட்டின் கேட்டைத் திறக்க முயன்றபோது , கேட் பூட்டப்பட்டு இருந்துள்ளது.
அதன் பின் மதிலால் ஏறி உள்ளே சென்ற போலீசார், வீட்டு கூரை மீதெறி, கூரையை பிரித்துக் கொண்டு இறங்கி வீட்டுக்குள் சென்று பார்த்த போது , அவர் அங்கு ஒளிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் அவரை அவரது வீட்டிலேயே போலீசார் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளனர்.
அதன்பின் அவரது வீட்டு வாசலில் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற அறிவிப்பை ஒட்டிய போலீசார் அவரது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
இவர் ஜெனீவா ஐநா தொடர்கள் சம்பந்தமான செய்திகளை பகிரும் ஒரு பிரபல ஊடகவியளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.