இராணுவ வைத்தியசாலையிலேயே ரணிலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டார் இராணுவத் தளபதி பதிலடி.
கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்கு, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இராணுவத் தளபதி பதிலளித்துள்ளார்.
கொரோனாத் தடுப்பு ஜனாதிபதி செயலணி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்தினர் முன்னெடுக்கும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் இராணுவ வைத்தியசாலையிலேயே தடுப்பூசி பெற்றுக்கொண்டார் என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்திடம் இருந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவர், நாட்டு மக்கள் தடுப்பூசி பெறுவதைப் பற்றி எவ்வாறு விமர்சிக்க முடியும் என்றும் சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாத் தடுப்புச் செயலணியில் ஜனாதிபதி, துறைசார் அமைச்சர்கள், வைத்திய நிபுணர்கள் இருக்கின்றனர் என்றும், இராணுவத்தினர் தன்னிச்சையாகத் தீர்மானங்களை மேற்கொள்வதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.