தமிழர் பண்பாட்டில் ஆடி அமாவாசையும் காத்தோட்டிக்காயும்.
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். ஆடி அமாவாசை காலத்தில் முன்னோரை நினைத்து கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கின்ற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது.
அன்றைய தினத்திலே பல வகை கறிகளுடன் உணவு சமைப்பது வழக்கமாகும். இன்றைய விரத நாளில் “காத்தோட்டிக்காய்” என்னும் காயும் பொரித்துப் படைக்கப்படும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. பிதிர்களுக்குக் கசப்பான உணவில் பிரீதி அதிகம். அதனால் தான் காத்தோட்டிக்காயும் பாகற்காயும் விரதத்திற்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.காத்தோட்டிக்காய் உடலில் உள்ள வாயுவை அகற்றுவதுடன் பல வகை நோய்களுக்கும் தீர்வான மருந்தாகவும் அமைகின்றது.இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் இவற்றைத் தவற விட்டவர்களாக உள்ளனர்.