“உங்கள் மகள் வேறொருவருடன் ஓடி விட்டாள்” மனைவியை கொன்று விட்டு நாடகமாடியவர் கைது
திருமணமான இரண்டே நாளில் பெண் கொலை; போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை!
“உங்கள் மகள் வேறொருவருடன் ஓடி விட்டாள்” என்று அவர் பெற்றோருக்குத் தகவல் சொல்லியுள்ளார்.
திருமணமான 2-வது நாளில் கர்ப்பிணியாக இருந்த காதல் மனைவியை எரித்துக்கொன்று, வேறொருவருடன் ஓடிவிட்டார் என்று நாடகமாடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் அருகேயுள்ள ராயபுரம் சகாயராஜின் 21 வயது மகள் துளசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மதுரையிலுள்ள கல்லூரியில் இளங்கலை படித்து வந்தார். அவருக்கும் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. துளசி கர்ப்பமடைந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சோழவந்தான் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள கோயிலில் காவல்துறையினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் ஜோதிமணியின் பெற்றோர் கலந்துகொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து துளசியை மதுரையிலுள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சென்ற ஜோதிமணி, “உங்கள் மகள் வேறொருவருடன் ஓடி விட்டாள்” என்று அவர் பெற்றோருக்குத் தகவல் சொல்லியுள்ளார். அதைத்தொடர்ந்து சோழவந்தான் காவால் நிலையத்தில் புகார் கொடுக்க, விசாரணையில், துளசியை ஜோதிமணி கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “ஜோதிமணியால் துளசி கர்ப்பமான விஷயம் தெரிந்து மகளைத் திருமணம் செய்துகொள்ள கேட்டபோது ஜோதிமணி மறுத்துள்ளான். அதன் பிறகு சோழவந்தான் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். கடந்த 2-ம் தேதி சோழவந்தானில் இருவருக்கும் நடந்தது. அதில் ஜோதிமணி உறவினர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளான் ஜோதிமணி.
திருமணம் முடிந்து இரண்டு நாள் மட்டும் அங்கு இருந்தவிட்டு, துளசியை தன் வீட்டுக்கு கூட்டி செல்வதாக கூறி கிளம்பியுள்ளான். அதன் பிறகு, துளசியின் பெற்றோருக்கு போன் செய்த ஜோதிமணி, உங்கள் மகள் வேறொரு நபரை காதலித்துள்ளார். அவருடன் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளான். பதறிப்போன துளசியின் பெற்றோர் போலிஸில் புகார் செய்தனர். இவனும் அவர்களுடன் இருந்திருக்கிறான்.
இதில் ஏதோ மர்மம் இருப்பதை தெரிந்துகொண்ட விசாரணை அதிகாரிகள், ஜோதிமணியை பிடித்து தீவிரமாக விசாரித்ததில், துளசியிடம் பழகினாலும், திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும், அவருக்கு இன்னும் சிலருடன் பழக்கம் இருந்ததால் சந்தேகம் இருந்ததாகவும், கர்ப்பத்துக்கு நான் காரணமில்லை, தன்னை சோழவந்தான் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடுதான் ஊருக்கு கூட்டிச்செல்வதாக அழைத்து வந்து அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் துளசியிடம் சண்டையிட்டேன். பின்பு ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். புதருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அவள் பெற்றோருக்குத் தகவல் சொல்லிவிட்டு அவர்களுடன் நானும் சேர்ந்து தேடுவதுபோல் நடித்தேன். ஆனால், அதற்குள் கண்டுபிடித்து விட்டார்கள்” என்று விசாரணையில் கூறியுள்ளார்.
கொலை செய்து எரித்த சம்பவத்தில் ஜோதிமணி மட்டும் சம்பந்தப்பட்டுள்ளாரா, வேறு யாரும் உதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.