மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகசபைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெற்றபோது அதிகளவான பக்தர்கள் ஒன்றுகூடி தீர்த்தமாடியமை தொடர்பாக சுகாதாரப் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
இதன் போது ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அடிப்படையில் 5 பேருக்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகியன ஒருங்கே அமையப் பெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலய நிர்வாக சபையினரால் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டிருந்தும், வெளிவீதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் கட்டளைகளையும் மீறிய பக்தர்கள் அதிகளவில் திரண்டு தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது.