கொரோனாவைச் சமாளிக்க முடியவில்லை; நாட்டை ஒரு மாதத்துக்கு உடன் முடக்குங்கள் அரசிடம் சுகாதார அதிகாரிகள் அவசர கோரிக்கை
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குக் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு சுகாதார அதிகாரிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கையில்,
“கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பு மற்றும் கொரோனா தொடர்பான இறப்புகள் காரணமாக ஊரடங்கு உத்தரவை விதிப்பது அவசியம். நாட்டின் தற்போதைய நிலைமையை சுகாதாரத்துறையினரால் சமாளிக்க முடியவில்லை.
கொரோனா நோயாளிகளின் நாளாந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 ஆயிரத்தை எட்டியுள்ள அதேவேளை, இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100 ஐ எட்டியுள்ளது. அதேபோல், கடந்த 13 நாட்களில் கொரோனா சாவு ண்ணிக்கை சுமார் ஆயிரத்தை எட்டியுள்ளது.
மருத்துவமனைகளின் பிரேத அறைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.அதே நேரத்தில் மருத்துவமனைகளின் பொது வார்டுகளிலும் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் தொடர்ச்சியான அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நிலைமையைக் குறைக்கவும் தொற்று விகிதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்” – என்று சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.