ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின் இன்று அல்லது நாளை அதிரடி கட்டுப்பாடுகள்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ (10) அல்லது நாளையோ (11) விதிக்கப்படலாம் என என்று ‘டெய்லிமிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளின் சடுதியான அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் இறப்புகள் காரணமாக நாட்டின் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு சுகாதார நிபுணர்கள் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றார்கள்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி டெல்டா வைரஸ் வகையால் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200 ஐத் தாண்டும் என்றும், தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.