சினமன் கிரேன்ட் குண்டுவெடிப்பின் 7வது சந்தேகநபரான பதியூதினை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டதாகவும் சூத்திரதாரிகளுடன் தொடர்பு பேணியதாகவும் தெரிவித்து கடந்த ஏப்ரல் 24ம் திகதி அதிகாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இன்றுவரை பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த பதியூதின் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து செலவுகளையும் செப்பு கம்பி தொழிற்சாலை நிறுவனமான ‘கொலோசியஸ் நிறுவனம்’ செய்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தினர் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்பித்து தெரிவித்தனர்.
சினமன் கிரேன்ட் ஹோட்டலில் குண்டு வெடிக்க வைத்து உயிரிழந்த இன்சாப் அஹமட் என்ற நபருக்கு சொந்தமானதே குறித்த செப்புக் கம்பி தொழிற்சாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலோசியஸ் நிறுவனம் இலங்கை தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்ததாகவும் அதற்கு வௌிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு அதனை தற்கொலைதாரி இன்சாப் அஹமட் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவ்வாறு பெறப்பட்ட 120 லட்சம் ரூபா அவரது மனைவியான உம்மு ரசீனாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சினமன் கிரேன்ட் ஹோட்டல் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7வது சந்தேகநபராக ரிசாத் பதியூதின் பெயரிடப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார்.
அதன்படி வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை ரிசாத் பதியூதினை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.