கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பாக முப்படையின் மருத்துவ துறையினர்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பாக முப்படையின் மருத்துவ துறையினர் ஈடுபடுத்தப்பட்டமையின் பலனாக நாளொன்றுக்கு ஆயிரம் கணக்கில் வழங்கப்பட்டுவந்த தடுப்பூசி இலட்சமாக அதிகரிக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பது என்பது தேசிய பாதுகாப்பை சார்ந்ததாகும் என்ற தெரிவித்த அவர், உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய் பரவும் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு படைவீரர்களை சாரும். எனவே தான் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி முப்படையினரை ஈடுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் செயற்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் ஒன்லைன் முறைமையில் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில்; –
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் சிந்தித்து பார்க்கவே முடியாது. பயங்கரவாதம், பிரிவினைவாதம், இயற்கை அனர்த்தம் மற்றும் மக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்ப்பரவல் அனைத்தும் தேசிய பாதுகாப்பை சாரும். அந்த அடிப்படையிலேயே மக்களின் நலனை கருத்திற் கொண்டு முப்படையினரை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளார்.
இராணுவத்தினர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளமையை சிலர் தேவையற்ற விதத்தில் விமர்சிக்கின்றனர். இராணுவம் என்றவுடன் மருத்துவ துறை தெரியாத பீரங்கி தூக்குபவர்களை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிலர் நினைக்கின்றனர். மாறாக இராணுவ மருத்துவத்துறையில் அனுபவம் பெற்றவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பாதுகாப்புச் செயலாளர் என்றவைகயில் தான் பொறுப்புடன் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பாக முப்படையின் மருத்துவ துறையினர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் பலனாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை துரிதமாக பாதுகாக்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டினார்.