ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் ட்விட்டர் தகவல்
சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அடையாளத்தை வெளியிட்டதற்காக ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளியிட்ட காரணத்தால் ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அடையாளத்தை வெளியிட்டதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று நடைபெற்ற விசாரணையில், ட்விட்டர் தரப்பில் “எங்களின் விதிகளை மீறி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். எனவே, அப்பதிவை நீக்கி அவரின் ட்விட்டர் பக்கத்தை நிறுத்தினோம்.
ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக மனுதாரர் தவறான வழக்கை தொடுத்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் டி.என். படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ராகுல் காந்திக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும், அவருக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.