இலங்கையை விட்டு வெளியேறி 50 ஆண்டுகளுக்கு பின் நண்பனை சந்தித்த நபர்! நெகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம்
இலங்கையை விட்டு வெளியேறிய நபர் 50 ஆண்டுகளுக்கு பின் நண்பனை நேரில் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(50). இவர்கள் இருவரும், பலாங்கொடை பகுதியிலுள்ள சி சிஓஎம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்பட்ட போர் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகளினால், இவர்களது பெற்றோர் இவர்களை அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வந்து விட்டனர்.
மகேஸ்வரன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலும், கணேசன் குடும்பத்தினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியிலும் குடியேறியுள்ளனர்.
இதையடுத்து, கணேசன், சேலம் வணிகவரித் துறையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மகேஸ்வரன் அரியலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பிட்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இருவரும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய பிறகு, ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
ஆனால் அவ்வப்போது இருவரும் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், வாழப்பாடி சேர்ந்த கணேசன் குடும்பத்தினர், செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள குன்னம் ஆயக்குடி கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வேப்பூர் பகுதியில் வசித்து வரும் இலங்கையில் தன்னுடன் பள்ளியில் படித்த தனது சினேகிதன் மகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின் மகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் ஆயக்குடி கிராமத்திற்கு வந்து சேர, இருவரும் எளிதாக அடையாளம் கண்டு கொண்டு, கட்டியணைத்து, கண்ணீர் மல்க நட்பை பரிமாறிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மகேஸ்வரனுக்கு அசைவ உணவை விருந்தளித்த அவர், தனது நண்பனை தனது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.