தமிழக அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயின் வரவும்… செலவும்…
தமிழக அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வருவாயிலும் 23 காசுகள் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக செலவிடப்பட்டுள்ளதாக கடந்த 2020-21ஆம் நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
தமிழக அரசு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக, வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2020 – 21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி தமிழக அரசின் வரவு செலவுகளில், அரசுக்கு வருவாயாக கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயில், மாநில அரசு வசூலிக்கும் வரிகள் மூலமாக அதிகபட்சமாக 61 காசுகள் வருமானமாக கிடைக்கிறது. மத்திய வரிகளின் மூலமாக 15 காசுகள் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் வருவாயிலும் மத்திய அரசின் மானியம் மூலமாக 17 காசுகள் கிடைத்துள்ளது. மாநில அரசின் இதர வருவாய் ஒரு ரூபாய்க்கு 7 காசுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவு கணக்கை பார்க்கும் போது மாநில அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக 23 காசுகள் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக 11 காசுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகளுக்காக ஒரு ரூபாய் வருவாயில் 5 காசுகளை தமிழக அரசு செலவிட்டுள்ளது. விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியத்திற்காகவும், உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து மொத்தமாக 34 காசுகள் செலவிடப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டிக்காக ஒரு ரூபாயில் 13 காசுகள் செலவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மூலதன செலவுகள் 13 காசுகள் என்றும் முன்பணத்திற்காக ஒரு ரூபாய்க்கு 1 காசுகள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.