மடுத் திருதலத்துக்கு வருகை தருகின்றவர்களை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை
மன்னார் மறை மாவட்டம் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாகவோ அல்லது போக்குவரத்து மூலமோ வேறு மாவட்டங்களில் இருந்து மடுத் திருதலத்துக்கு வருகை தருகின்றவர்களை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தேசிய திருவிழாக்களில் ஒன்றான மன்னார் மாவட்டம் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவானது எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டு நாங்கள் இவ்விழா தொடர்பாக முடிவுகளை மேற்கொண்டுள்ளோம். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைகளுக்கிணங்க இம்முறை மடு திருவிழாவுக்கு 150 பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு சில நாட்களில் எங்கள் அவதானிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் மடுத் தேவாலயத்தை நோக்கி வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
பாதுகாப்புத் துறையின் உதவியுடன் பாதயாத்திரையாக அல்லது போக்குவரத்து மூலமோ வேறு மாவட்டங்களில் இருந்து மடுத் திருதலத்துக்கு வருவதை நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.