இராணுவத்தின் நடமாடும் சேவையூடாக தடுப்பூசி.
எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதோருக்கு இராணுவத்தின் நடமாடும் சேவையூடாக தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்று வட கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை இன்று கொழும்பு தெற்கு பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இந்த நடமாடும் சேவையூடாக தடுப்பூசி வழங்குல் தொடர்பில் இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது,
இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் சுகாதார தரப்பினருடன் இணைந்து தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.
அதற்கமைய இதுவரையில் பெற்றுக் கொள்ளப்பட்ட சகல தடுப்பூசிகளும் நாட்டின் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இவ்வாரம் முதல் இராணுவ வைத்தியசாலை, களுத்துறை வைத்தியசாலை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளிலும் இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்ட வேறு ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டோர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.அதற்கமையவே இந்த தரப்பினரை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்திற்குள் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.இதன்போது சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசிகளை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு உரிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத ஒரு குறிப்பிட்ட தரப்பினர் ஒரே இடத்தில் வசிப்பதாகவும் அவர்கள் ஏதேனுமொரு அசௌகரியத்தினால் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமலுள்ளனர்.
அவர்களை அழைத்து வருவதிலும் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுடன் இணைந்து இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.