கொரோனாவை காரணம் காட்டி முதியோரை மருத்துவ மனைகளில் கைவிடும் துயர்
முதியோர்கள், கொரோனாவுக்குப் பின் உள்ள நிலமை காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்படியான நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால்,சிலர் வீட்டில் உள்ள முதியவர்களை களுபோவிலை போதனா மருத்துவமனைக்கு ஏமாற்றிக் கொண்டு சென்று, அவர்களை கைவிடப்படும் போக்கு காணக் கூடியதாக இருப்பதாக களுபோவிலை போதனா மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்ஷன் பெல்லானா கூறினார்.
12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஆறு வயோதிப பெண்கள் மற்றும் ஆண்களை கொண்டு வந்து சிலர் விட்டுச் சென்றுள்ளதாக டொக்டர் ருக்ஷன் பெல்லான தெரிவித்துள்ளார்.
அப்படி கொண்டு வந்து விட்டுள்ள முதியோர் , பல்வேறு நோய்களை உடையோராக இருப்பதாகவும், அவர்களில் சிலருக்கு சுய நினைவு கூட இல்லை என்றும் டொக்டர் ருக்ஷன் பெல்லன கூறுகிறார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் , நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் இப்படியான தருணத்தில் , வயதானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கப்பட வேண்டியதாக இருந்தும் , அவர்களை வீட்டிலிருந்து ஏமாற்றி அழைத்து வந்து , தவிக்க விட்டுச் செல்வது கடுமையான குற்றமும் , நெறிமுறையற்ற செயலுமாகும் என்றார்.
மருத்துவரை பார்க்க அழைத்துச் செல்வதாக சொல்லி , ஆடம்பர வாகனங்களில் முதியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் வருவோர், வெளிநோயாளர் பிரிவில் அவர்களை விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.
அவர்களில் சிலர் , தற்போதுள்ள நோய்கள் காரணமாக சிகிச்சைக்காக வார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.