அரசின் கால வீணடிப்பால் மாணவர் கல்வியே பாதிப்பு அதிபர்கள் சங்கத்தின் தலைவர் குற்றச்சாட்டு
“சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்து 32 நாட்கள் நிறைவடைந்துள்ளன. எனினும், இதுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. அரசின் கால வீணடிப்புகளால் மாணவர்களின் கல்வியே பாதிப்படைந்துள்ளது.”
– இவ்வாறு இலங்கை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் பராக்கிரம வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வரலாறு முழுவதும் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குப் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படும். அந்த யோசனைகள் காலதாமதப்படுத்தப்படும். தற்போதைய அரசிலும் இவ்வாறான ஒருபோக்கே காணப்படுகின்றது.
சுபோதினி அறிக்கையையே சமர்ப்பித்ததாக அரசுக்குச் சார்பான தொழிற்சங்கம் ஒன்று கூறுகின்றது. அந்தச் சுபோதினி அறிக்கையை எமது சகல தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, இதனைச் செயற்படுத்துவதற்காகத் தொடர்ந்து ஆணைக்குழுக்களை அமைத்துக் காலம் தாழ்த்துவது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
இந்தக் கால வீணடிப்புகளால் மாணவர்களின் கல்வியே பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வியில் அக்கறையிருப்பின் அரசானது காலத்தை வீணடிக்காது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள இந்த அறிக்கையைச் செயற்படுத்த வேண்டும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்வரை இருக்க வேண்டுமெனில் அதற்கு முன்பாக எம்முடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு அரசுக்கு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.