செப்டெம்பர் 15 முதல் பொது இடங்களில் இரு டோஸ்களும் பெற்ற அட்டை அவசியம்
இன்று நள்ளிரவு முதல், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை, விமான நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய துறையில் ஈடுபட்டுள்ள மற்றும் முதலீட்டு சபையினால் அனுமதி பெற்ற ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் நபர்களுக்கு மாத்திரம் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படுமென அவர் அறிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் பிரிவுகள் ஆகிய இரு பிரிவுகளுக்கும் ஊழியர்களை சேவைக்கு அழைக்கும்போது அவசியத்தின் அடிப்படையில் மாகாணத்திற்கு வெளியில் உள்ள ஊழியர்களை அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள ஊழியர்களை சேவைக்கு அழைப்பது, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பணியிடங்களின் கொள்ளளவின் அடிப்படையில் அதனை நடைமுறைபப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இரு டோஸ்களையும் பெற்ற அட்டையை வைத்திருப்பது அவசியம்
எதிர்வரும் செப்டெம்பர் 15 இற்கு பின்னர் கொவிட் தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.