பிராத்வெயிட், ஹோல்டர் அபாரம் – 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 251/8.
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 2 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார். மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
100 ரன்களை எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய கேப்டன் ஹோல்டர் பிராத்வெயிட்டுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். ஹோல்டர் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பிராத்வெயிட் 97 ரன்னில் ரன் அவுட்டானார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஷ்வா சில்வா 20 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியை விட 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் அப்பாஸ் 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.