நாட்டை முடக்காவிடின் கொரோனா படுகொலையே அரங்கேறும்! – சுனெத் அகம்பொடி மீண்டும் எச்சரிக்கை.

இலங்கையை உடன் முடக்கிக் கொரோனா மரணங்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் நாட்டில் கொரோனாப் படுகொலையே இடம்பெறும் என்று சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் இப்போது தீர்மானம் எடுக்காது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், அதன் மூலமாக மக்களைக் காப்பாற்றாது போவதும் ஒரு விதத்தில் படுகொலைக்குச் சமமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாக இலங்கையில் மரணங்கள் பதிவாகலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இது எண்ணிக்கையில் அல்ல, வீதத்தில் கணிக்கப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி இந்தியாவை விட நான்கு மடங்கு வீதத்தால் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன.
அடுத்த மூன்று நான்கு வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும். எனவே, உடனடியாக நாட்டை முடக்கும் தீர்மானம் எடுத்து மரண எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போதுள்ள நிலையில் தரவுகளுக்கு அமைய, நாளாந்தம் 600 மரணங்கள் பதிவாகலாம். ஆனால், மாற்றங்களை முன்னெடுத்தால் மரணங்களைக் குறைக்க முடியும்.
எவ்வாறாயினும் நாளாந்தம் 150 மரணங்கள் பதிவாவதைத் தடுக்க முடியாது. இதனைவிட அதிகரிக்க இடமளிக்கக்கூடாது என்பதையே நாம் கூறுகின்றோம்.
இதனால் நாட்டை முடக்கினாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னரே நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும்” – என்றார்.