ஆப்கான் தென் பகுதி தலிபான் வசமானது.
ஆப்கானிஸ்தானின் தென் பகுதி முழுவதும் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கந்தகார் உட்பட 4 மாகாண தலைநகரங்களை கைப்பற்றி உள்ளனர். தலைநகர் காபூலையும் சுற்றிவளைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்ற ஒரே மாதத்தில் தலிபான்களின் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அரசு படைகளை எதிர்த்து போராடும் அவர்கள் தற்போது 34 மாகாண தலைநகரங்களில் 12 நகரங்களை கைப்பற்றி உள்ளனர். நாட்டின் 3ல் 2 பங்கு தலிபான்கள் வசமாகி உள்ளது. தென் பகுதி முழுவதையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஹெல்மண்ட் மகாணத்தில் தலைநகர் லஷ்கர் கா, ஜாபுல் மாகாண தலைநகர் காலத், உருஸ்கன் மாகாண தலைநகர் டிரின் காட் ஆகிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் நாட்டின் 2வது மற்றும் 3வது பெரிய நகரங்களான கந்தகார், ஹிரத் நகரங்களையும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தற்போது தலிபான்கள் லோகர் மாகாணத்தில் சண்டையிட்டு வருகின்றனர். இந்நகரம் காபூலில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. அங்கு பொலிஸ் தலைமையகத்தை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது.
தலைநகர் காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த 3 நாளில் 5 நகரங்களை தலிபான்கள் பிடித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 30 நாளில் தலைநகர் காபூலை அவர்கள் பிடிப்பது மட்டுமின்றி, சில மாதத்தில் ஒட்டு மொத்த நாட்டையும் தங்கள் வசம் கொண்டு விடுவார்கள் என அமெரிக்க உளவுத் தகவல்கள் எச்சரித்துள்ளன.
* பாக்.கில் தஞ்சமடைய தவிக்கும் ஆப்கன் மக்கள்
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சாமன் பகுதி பலுசிஸ்தான் மாகாணத்தை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்டுக்கு இடையே முக்கிய எல்லைப் பாதையான சாமன் வழியாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைய முன்னேறி வருகின்றனர். இந்த எல்லையை தலிபான்கள் கடந்த வாரம் மூடினர். ஏற்கனவே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆப்கன் மக்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவம் அனுமதிக்க மறுப்பதால், மக்கள் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் சொந்த நாட்டில் வாழ முடியாத ஆப்கன் மக்கள் பாகிஸ்தானிலும் தஞ்சமடைய முடியாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே பாகிஸ்தானில் 20 லட்சம் ஆப்கன் அகதிகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப்படை என்ன செய்கிறது?
ஆப்கன் அரசை பொறுத்த வரை காபூலை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. அந்நகரில் மட்டுமே ஒட்டுமொத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தலிபான்கள் விரைவில் தகர்ப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
ஆப்கனில் உள்ள நிலவரம் மிகவும் கவலை அளிப்பதாக ஐநா பொதுச் செயலாளர் கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
* அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் விரைகின்றன.
ஆப்கானிஸ்தானில் நிலைமை மிக மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கிருந்து தூதரக அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டு மக்களை மீட்டு வர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் படைகளை அனுப்பி உள்ளன. அமெரிக்கா 3000 வீரர்களையும், இங்கிலாந்து 600 வீரர்களையும் அனுப்பி தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர முடிவு செய்துள்ளன.
* படை வாபஸ் மிகப்பெரிய தவறு
இங்கிலாந்து கூட்டுப்படை முன்னாள் தளபதி ரிச்சர்ட் பர்ரன்ஸ் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது மிகப்பெரிய தவறு. இதனால் அங்கு தீவிரவாதம் அதிகரித்து விட்டது. படைகள் வாபசால் ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் விற்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.