மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்புக் கொடி ஏந்தி இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை.
ஆகவே உள்நாட்டுக்குள்ளேயே எதிர்ப்புக்களை தெரிவித்துவந்த நாம், இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராகவுள்ளதாக குறிப்பிட்டார்.