உடல் நலக் குறைவால் மதுரை ஆதீனம் நேற்று இரவு காலமானார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மதுரை ஆதீனம் மடத்திற்கு 292ஆவது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். அதாவது மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகா சன்னிதானம் என்று அவர் அழைக்கப்பட்டார்.
இவர் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, தருமபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்த மதுரை ஆதீனம் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 9.15 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1500 ஆண்டுகள் பழமை மிக்க மதுரை ஆதீனத்தின் 292-ஆவது பீடாதிபதியாக – சைவ சித்தாந்தத்தைப் பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர்.
மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் விளங்கிய மதுரை ஆதீனம் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பேரன்பிற்கு உரியவராகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஆன்மீகவாதிகளுக்கும் – சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.