தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதால் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டிய தேவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து காணப்படுவதனால் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மாணங்களை அறிவிக்கும் ஊடக மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே மாவட்ட அரசாங்க அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில், பொது ஒன்று கூடல்கள் ஊடாகவே அதிகளவான தொற்றுக்கள் கொண்ட கொத்தணிகள் உருவாகின்றது. இதனால் ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், மரண சடங்குகள், வைபவங்கள் உட்பட ஏனைய நிகழ்வுகளிற்கு அதி உச்சமாக 15 பேர் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் புதிய சுற்று நிருபங்கள் நடைமுறைக்கு வரும்வரை இக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அதிகரித்து வருகின்ற கொவிட் நோயாளர்களுக்கு சிகிட்சைகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாராக உள்ளதெனவும், தற்போது 4 விடுதிகளில் கொவிட் நோயாளர்கள் பராமரிக்கபபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு கட்டில்கள் அதிகரிக்க வேண்டிள்ளதனால் மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையையும் எதிர்வரும் 16 ஆந் திகதி முதல் இணைத்துக்கொள்ளப்பட்டு கொவிட் நோயாளர்களுக்காக சிகிட்சைகள் அழிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதெனவும், அவசரமான அவசியமான நோயாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குறித்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி.கே.கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் கிளினிக் நோயாளர்கள் புதிய நடைமுறைகளின் பிரகாரம் தொலைபேசி ஊடாகவும் உறவினர்கள் ஊடாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மரத்திரமே பாஸ் வழக்கப்படுமெனவும், தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் நோயாளியுடன் ஒருவர் தரித்து நிற்கலாம் என்று தெரிவித்தார்.
அதேவேளை அதி தீவிர சிகிட்சை பிரிவில் இன்று (14) காலை 8 மணிக்குள் 5 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை அழிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 220 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 மரணங்கள் சம்பவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி நா.மயூரன் குறித்த ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாவட்டத்தில முதலாவது கொவிட் தடுப்பூசியினை இரண்டு இலட்சத்தி அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இரண்டாவது கொவிட் தடுப்பூசியினை அறுபதாயிரம் பேர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதுவரை 145 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணமடைந்துள்ளதாகவும் இதில் மூன்றாவது அலையில் 136 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன்,
இதில் ஆண்கள் 82 பேரும், பெண்கள் 63 பேரும் அடங்குகின்றனர்.
அதேவேளை ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் கொரோனா உடலங்களை அடக்குவதற்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் இதுவரை 1622 உடலங்களை அடக்கம் செய்துள்ளதாகவும், இன்னும் 300 உடலங்களை அடக்கம் செய்ய முடியுமெனவும் இதற்கு மேலதிகமாக புதிய இடத்தினை அரசாங்கம் அடையாளம் கண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.