ஜம்முவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நால்வர் கைது: சுதந்திர தினத்துக்கு முன்பாக தாக்குதல் முயற்சி முறியடிப்பு

சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்முவில் தாக்குதல் நடத்தி வன்முறையைத் தூண்ட திட்டமிட்டிருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 4 பேரையும், அவர்களுக்கு உதவிபுரிந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜம்மு காவல்துறை உயரதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: ஜம்முவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரும், அவர்களுக்கு உதவிபுரிந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்முவில் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அத்துடன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் எல்லை தாண்டி கடத்தி வரப்படும் ஆயுதங்களை சேகரித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாதிகளிடம் வழங்கவும் அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.
இதுதவிர நாட்டின் இதர பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை உளவு பார்க்கவும் செய்தனர்.

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முந்தாஸிர் மன்ஸþரை போலீஸார் முதலில் கைது செய்தனர். இவர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள், 2 சீன கையெறி குண்டுகள், காஷ்மீருக்கு ஆயுதங்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த இஜஹர்கான், ஜம்மு-காஷீமிரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த தௌசீஃப் அகமது ஷா, புல்வாமாவைச் சேர்ந்து ஜஹாங்கீர் அகமது பட் ஆகிய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ராம ஜென்மபூமியில் உளவு பார்க்க முயற்சி: இவர்களில் இஜஹர்கானிடம் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த முனாசிர் என்பவர் அந்நாட்டில் இருந்து ட்ரோன் மூலம் அனுப்பப்படும் ஆயுதங்களை பஞ்சாபின் அமிருதசரஸ் நகர் அருகே பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் உள்ள பானிபத் நகரில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உளவு பார்க்கவும் அவர் கூறியுள்ளார்.
அதனை ஏற்று அந்த சுத்திகரிப்பு நிலையத்தை இஜஹர்கான் உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு காணொலிகளை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவரிடம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் ராம ஜென்மபூமியையும் உளவு பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு பயங்கரவாதியான தௌசீஃப் அகமது ஷாவிடம் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்முவில் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு இருசக்கரவாகனம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹித், அப்ரார் ஆகிய இரண்டு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். ட்ரோன் மூலம் வெடிகுண்டு அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காஷ்மீரில் பழ வியாபாரியாக உள்ள ஜஹாங்கீர் அகமது பட் பாகிஸ்தானில் உள்ள ஷாஹித்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அவர்தான் இஜஹர்கானை ஷாஹித்திடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். காஷ்மீரிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தில் ஆட்களை சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.