11 ஆயிரம் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல் சுவாசப் பிரச்சினைகள் காரணமாக 500 பேர் வைத்தியசாலையில்….

இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்கள் 11 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குடும்ப மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் மேலும் தெரிவித்ததாவது:-

“வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் கொரோனாத் தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் குறித்த நோயாளிகள் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு 1390 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்படுகின்றது.

அதன் பின்னர் நோயாளிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

1390 என்ற இலக்கம் ஊடாக நோயாளிகளிடம் தொலைபேசி ஊடாக உரையாடி சுவாசப் பிரச்சினைகள் உள்ளதா என்பது தொடர்பில் வினவப்படுகின்றது.

அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் நுரையீரல் தொற்று ஆரம்பித்துவிட்டது எனக் கருதப்படுகின்றது. அதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 11 ஆயிரம் கொரோனா நோயாளிகளில் 500 பேர் வரையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுவாசப் பிரச்சினைகள் காரணமாக இவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.