வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 லட்சம் கோடியில் திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 100 லட்சம் கோடி ரூபாயில் கதி சக்தி திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் 100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி திட்டம்’ அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டம் மூலம் புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், மிகப் பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும்.
துல்லிய தாக்குதல், விமான தாக்குதல் மேற்கொண்டதன் மூலம் புதிய இந்தியா உருவாகியுள்ளதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளோம். இந்தியா மாறுதல் அடைந்திருக்கிறது. கடினமான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு சர்வதேச உறவுகளின் தன்மை மாறியது.
அதேபோல், கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக ஒழங்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. உலக நாடுகளின் முயற்சிகளை கண்டு இந்தியா பாராட்டியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் விதமும் மாறியுள்ளது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
ஒன்று பயங்கரவாதம். இரண்டாவது எல்லைகளை ஆக்கிரமிக்கும் போக்கு. இவ்விரண்டு சவால்களுக்கு எதிராகவும் இந்தியா போரிட்டுவருகிறது. புத்திசாலித்தனமாகவும் துணிச்சலாகவும் பதிலளித்துவருகிறது” என்றார்.