இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்றும், இந்தயாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டனர் என்றும், ‘எய்ம்ஸ்’ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த கேள்விகள், தொடர்ந்து வலம் வரும் நிலையில் இது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறுகையில், “நம் நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனினும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றா விட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம்.
இப்போதைக்கு கொரோனா மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை கணிக்க முடியாது. மூன்றாம் அலை ஏற்பட்டால் அப்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது. எனவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில் நடத்திய ஆய்வில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துவிடும். தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத மக்களே தற்போது கொரோனா வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியும் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு அதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.” இவ்வாறு கூறினார்.