இலங்கையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் என்ன நடக்கும் – அஜித் ரோஹண விளக்கம்
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இன்று (16) முதல் பல தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விளக்கத்தை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்று முதல் கூட்டங்கள், நிகழ்வுகள், திருமணங்கள் போன்றவற்றை நடத்த முடியாது என அஜித் ரோஹன கூறினார்.
இருப்பினும், திருமணத்தை பதிவு செய்ய எந்த தடையும் இல்லை. வீட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
மணமகனும், மணமகளும், இரு தரப்பினரின் பெற்றோரும், பதிவாளரும், இரண்டு சாட்சிகளும் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.
அதைத் தவிர, வேறு யாருக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.
இதற்கிடையே, இன்று (16) இரவு 10 மணி முதல் நாளை (17) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
இது இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் செயல்படும். இந்த காலகட்டத்தில், அத்தியாவசிய சேவையாளர்கள், மற்றும் அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை மீறிய 479 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்கு அல்லது சிகிச்சையின் போது மட்டுமே நீங்கள் மாகாண எல்லைகளை கடக்க வாய்ப்பு கிடைக்கும்.
இதேவேளை, முகக்கவசம் அணியாத நபர்களை கைது செய்வதற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.