கொரோனாவுக்குள் நீதித்துறை எவ்வாறு செயற்பட வேண்டும்? பிரதம நீதியரசருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்.
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் நீதித்துறை எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய கடிதத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்தக் கடிதத்தில், நீதிமன்றங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நெரிசலைத் தடுப்பது அவசியம். எனினும், நாட்டின் பல நீதிமன்றங்களில் இருந்து அது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழ்நிலையில், விசாரிக்க முடியாத வழக்குகளை ஒத்திவைப்பது மற்றும் அத்தியாவசிய சாட்சிகளை மட்டும் நீதிமன்றத்துக்கு வரவழைப்பது பொருத்தமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.