உலகில் மிக வேகமாக மரணம் சம்பவிக்கும் நாடாக இலங்கை ராஜித எம்.பி. தரவுகளுடன் தெரிவிப்பு.
உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி இணைந்து உலகளாவிய ரீதியிலான கொரோனா மரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளன.
இதில் இலங்கை எந்த இடத்தில் உள்ளது என்பது தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
உலக தகவல்களுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகளவு கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னர் எடுத்துக்கொண்டால் நமது நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
தொற்றாளர்கள் உயிரிழக்கும் சதவீதத்தைக் குறைத்து அல்லது அதிகரித்துப் பார்த்தால் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளது.
உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது.
நமது நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மில்லியனுக்கு 5.7 வீதமானோர் கொரோனாத் தொற்றால் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1.9 வீதமானோர் மரணிக்கின்றனர். இங்கிலாந்தில் 1.33 வீதமானோரும், பிரான்ஸில் 0.76 வீதமானோரும், இந்தியாவில் 0.35 வீதமானோரும் மரணிக்கின்றனர். எனினும், இலங்கையில் 5.73 வீதமானோர் மரணிக்கின்றனர்.
இது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். இலங்கையில் 15ஆம் திகதி நிலவரத்தைப் பார்க்கும்போது கொரோனா மரணங்கள் 6000ஐ அண்மித்துள்ளன.
நேற்று (நேற்றுமுன்தினம்) 161 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கைகள் தொடர்பிலும் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு ஊடாக அரசு வெளியிடும் கொரோனா புள்ளிவிவரங்களில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 629 என்று அரசு கூறும்போது உண்மையான நிலவரம் 12 ஆயிரத்து 555 ஆகக் காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 என்று அரசு கூறும்போதும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றாளர்களின் எண்ணிக்கை 342 என்று கூறுகின்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் 71 என்று அரசு கூறும்போது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 163 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று தகவல்களை வெளியிட்டுள்ளார்” – என்றார்.