கொரோனா மரணங்களைத் தவிர்க்க நாட்டை உடன் முடக்கவேண்டும் அரசுக்கு சஜித் வலியுறுத்து.
“பொருளாதாரமா, ஒட்சிசனா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. இதற்கு அரசு நியாயமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் கொரோனா மரணங்களைத் தவிர்க்க நாட்டை உடனடியாக முடக்க வேண்டும். இதன்மூலமே எமது மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல மூன்றாம் தடுப்பூசியை இப்போதே அரசு தயார்படுத்த வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மை நிலைவரம் தொடர்பான தரவுகளை அரசு வெளியிடும் வேளையில் அதன் உண்மைத் தன்மையில் சந்தேகம் எழுகின்றது. இது எமக்குப் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட தரவுகளில் தவறுகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.
நாட்டின் உண்மை நிலைமை என்னவென்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு நாம் உண்மையைக் கூறும் நபர்கள் என்ற விதத்தில் எமக்கு உண்மையான கள நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
உண்மையைக் கூறினால் மட்டுமே கட்சி பேதமின்றி இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க எம்மாலும் செயற்பட முடியும். மாயைகளுக்கு அடிபணிந்து செயற்பட நினைத்தால் இறுதியாக நாடே நெருக்கடியில் விழும்.
நாம் மக்களுக்கான எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்றக் கொடுப்பனவுகளைத் தியாகம் செய்து மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” – என்றார்.