முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முகமது ஷியாப்தீன் இஸ்மத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளதுடன், சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த வீட்டில் ஏற்கனவே பணிபுரிந்த பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் ரிஷாத்தின் மனைவியின் சகோதரரான சந்தேகநபருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.