“என்னோடு இந்த போர் முடியட்டும்.. முந்தைய அதிபர்கள் செய்த தவறை செய்ய மாட்டேன்”.. பிடன்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும், இனியும் ஆப்கானிஸ்தானில் நாம் போராட வேண்டியது கிடையாது, நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பிடன் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக நடந்து வந்த போரில் தாலிபான்கள் வென்றுள்ளது. தாலிபான்களுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கான் படைகள் போர் புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மாகாணங்களை தவிர மற்ற மாகாணங்கள் அனைத்தையும் தாலிபான்கள் எந்த சிரமமும், மோதலும் இன்றி கைப்பற்றியது. பல இடங்களில் ஆப்கான் படைகள் சரண் அடைந்தது.

இந்த நிலையில் நேற்று காபூலையும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் தற்போது மொத்தமாக தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்றுள்ளது. நேற்று ஆப்கான் அதிபர் அப்சர் கானி பதவி விளக்கினார். தாலிபான்களின் இந்த வெற்றிக்கு அமெரிக்கா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அமெரிக்க படைகளை அமெரிக்க அதிபர் பிடன் வெளியேற்றிய விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் குறித்து இன்று பிடன் கருத்து தெரிவித்தார். இந்திய நேரப்படி இரவு 1 மணிக்கு (இன்று) செய்தியாளர்களை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்து இருந்தார். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேசுவேன், இதில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று பிடன் தெரிவித்து இருந்தார். ஆனால் சொன்ன நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக 1.30 மணிக்கு பிடன் செய்தியாளர்கள் முன் தோன்றி பேசினார்.

பிடன் தனது பேட்டியில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். நாங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று அங்கு செல்லவில்லை. அது எங்கள் பணியல்ல. ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமான சில குறிக்கோளுடன் சென்றோம். அல் கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க எதுவும் தகுந்த நேரம் கிடையாது.

வாபஸ் வாங்க காரணம்
எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதே நிலைதான். 5 வருடங்களுக்கு முன் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்து இருக்கும் 15 வருடங்களுக்கு பின் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நினைத்ததை விட வேகமாக மாற்றம் நடந்துவிட்டது. ஆப்கான் படைகள் தோல்வி அடைந்துவிட்டது. ஆப்கான் தலைவர்கள் அதிபர் விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத போது நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும். ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது. அப்படி ஒரு போரில் மரணிக்க வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது.

முடியாது
ஆப்கானிஸ்தானை ஒற்றுமைப்படுத்த எத்தனை ஆண்டுகள், எவ்வளவு படைகள் முயன்றாலும் முடியாது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே எங்களின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் விஷயங்களை கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற்றி வருகிறோம். அமெரிக்கர்களை காப்பது மட்டுமே என் நோக்கம். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அமெரிக்க படை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

டிரம்ப் முடிவு
நான் அதிபராக பதவி ஏற்கும் முன்பே முன்னாள் அதிபர் டிரம்ப் தாலிபான்களுடன் உடன்படிக்கையை மேற்கொண்டு 15 ஆயிரம் படைகள் வரை வாபசும் பெறப்பட்டுவிட்டது. அந்த ஒப்பந்தத்தை நான் தொடர்ந்து மேற்கொண்டேன். நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் எடுத்தது ரிஸ்க்தான். ஆனால் ஆப்கான் படைகள் நினைத்ததைவிட வேகமாக வீழ்ந்துவிட்டது. 20 வருடமாக போர் நடக்கிறது, இந்த போரை எதிர்கொள்ளும் 4வது அதிபர் நான். இதே போரை நான் இன்னொரு அதிபருக்கு கடத்தி செல்ல மாட்டேன்.

முடியட்டும்
நான்தான் இப்போது அதிபர். என்னோடு இந்த போர் முடியட்டும், முந்தைய அதிபர்கள் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்.. எனக்கு இது வருத்தம் தருகிறது. ஒசாமா பின் லேடனை கொன்றதோடு அமெரிக்காவின் பணி முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானை மாற்றுவது நம் வேலை இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது. இது நம்முடைய வேலை இல்லை. இது நம்முடைய தேசிய பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை. இதில் எப்போதும் கவனம் செலுத்த முடியாது. அமெரிக்க வீரர்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் உயிரை கொடுத்து போராட முடியாது.

நம் வேலை இல்லை
நான் நம் நாட்டு வீரர்களிடம் அதை கேட்க மாட்டேன். என்னை நீங்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் இதுதான் நாட்டிற்கும், நம் பாதுகாலர்களுக்கும் நல்லது. ஆப்கான் படைகள் அந்த நாட்டை காக்காத போது, நாம் ஏன் ஆப்கானிஸ்தானில் போர் புரிய வேண்டும்? இதற்காக பல டிரில்லியன் நாம் செலவு செய்து இருக்கிறோம், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம், அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தோம். ஆனால் அவர்களே தாலிபான்களிடம் சரண் அடைந்த போது நாம் ஏன் அவர்களுக்காக போராட வேண்டும்? என்று அமெரிக்க அதிபர் பிடன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.