தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!
ஆகஸ்ட் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியர்களாகிய நாம் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் நிச்சயமன்ற தன்மையை தலிபான்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் காபுல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த தகவல் வெளியாகியதால் நகர மக்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். ஒரு பக்கம் ஆப்கன் அரசு தரப்பினர் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். நகரமே கலவர கோலமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
இந்த சுவடே தெரியாமல் இந்தியாவில் இருந்து 6 சிப்பந்திகள், 40 பயணிகளுடன் (பெரும்பாலும் ஆப்கானிஸ்தானியர்கள்) காபுலுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் காபுல் வான்பரப்பை அடைந்த பின்னரும் அந்த விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. எந்தவித காரணத்தையும் கூறாமல் வானத்தில் வட்டமடிக்குமாறு அந்த விமானத்துக்கு கட்டளையிடப்பட்டது.
இதையடுத்து வேறுவழியில்லாமல் அடுத்த 90 நிமிடங்களுக்கு 16000 அடி உயரத்தில் ஏர் இந்தியா விமானம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் காபுல் வான்பரப்பில் விமானத் தகவல் தொடர்பு சரிவர இருக்காது என்பதால் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என கருதி கூடுதல் விமான எரிபொருளுடன் தான் அந்த ஏர் இந்தியா விமானம் சென்றிருந்தது.
இந்திய விமானம் போலவே மேலும் இரு வெளிநாட்டு விமானங்கள் அங்கு தரையிறங்க அனுமதி கிடைக்காமல் பறந்து கொண்டிருந்தன. இதனிடையே ஆண்டின் இந்த காலகட்டத்தில் அந்த வான்பரப்பில் காற்றில் வேகமும், வலிமையும் கூடுதலாக இருக்கும் என்பதால் விமானத்தை இயக்குவது சற்று சவால் மிகுந்தது.
160 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை விமானி ஆதித்ய சோப்ரா இயக்கிக்கொண்டிருந்தார். விமான பயணிகளால் கொஞ்சம் காபுலின் நிலை குறித்து ஊகிக்க முடிந்தது. அங்கு விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தரையிறங்குவது, ஏறுவதுமாக ஒரே பரபரப்பாக இருந்தது.
கடைசியில் ஒரு வழியாக விமானத்தை தரையிறக்க உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30-க்கு அனுமதி கிடைத்தது. ஆனால், காபுலின் அரசியல் நிலை மோசமடைந்துகொண்டிருந்தது என்பதை அதிகம் விமான பயணிகளும், சிப்பந்திகளும் அறிந்திருக்கவில்லை. விமானம் தரையிறங்கிய பின்னரும் கூட விமான சிப்பந்திகள் யாரும் காக்பிட் அறையை விட்டு வெளியே வரவில்லை, காபுலில் இது தான் வழக்கமாக இருக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் 129 பயணிகளுடன் அந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது.
அந்த விமானத்தில் இந்திய தூதரக பணியாளர்களும், ஆப்கன் அரசு அதிகாரிகளும், குறைந்தது 2 ஆப்கன் எம்.பிக்களும், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் மூத்த ஆலோசகர் ஒருவரும் இருந்தனர்.
காபுல் விமான நிலையத்தில் மக்கள் ஏக்கத்துடனும் பரிதவிப்பிலும் இருந்ததை காண முடிந்தது எனவும் எப்படியாவது அந்த மண்ணில் இருந்து அவர்கள் கிளம்பிவிட வேண்டும் என்ற பதைபதைப்பும் அவர்களின் கண்ணில் தெரிந்தது என ஆப்கனில் இருந்து டெல்லி வந்த விமான பயணி ஒருவர் தெரிவித்தார்.