இன்றைய பாராளுமன்ற அமர்வில் நடப்பவை என்ன?
நிலவும் கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு இவ்வாரம் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை மாத்திரமே கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10. மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 3 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அதியாயம் 235) தீர்மானங்கள் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 4.50 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.
அத்துடன், பல்வேறு காரணங்களால் இதுவரை கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமையை ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய அன்றைய தினத்தில் பாராளுமன்றத்தை அடுத்ததாகக் கூட்டுவதற்கும் நேற்றைய கூட்டத்தில் முடிவானது.