கோட்டாபய அரசின் இரவு நேர ஊரடங்கு ஆந்தைகளுக்கும் வௌவால்களுக்குமா? முருத்தெட்டுவே தேரர் சீற்றத்துடன் கேள்வி.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. மாகாண சபைத் தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெட்டத்தெளிவாக தெரியவரும். அதேபோல் இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆந்தைகள் மற்றும் வௌவால்களுக்காகவா எனக் கேட்க விரும்புகின்றேன்.”
இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தர்மம் என்றால் என்னவென்று புரியவில்லை. பிடிவாதப்போக்கில் ஆட்சியை முன்னெடுத்து வருகின்றனர். இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் இன்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். தேரரே, உங்களை நம்பித்தானே வாக்களித்தோம், இன்று என்ன நடக்கின்றது எனக் கடும் விரக்தியை வெளியிடுவதுடன், அரசின் பயணம் மாற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
கேஸ் இருக்கின்றதா, கிழங்கு இருக்கின்றதா என அன்று மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். ஆனால், இன்று கேஸும் இல்லை, கிழங்கும் இல்லை. எமது பலத்தைக் காட்டவேண்டிய நேரம்தான் வந்துள்ளது.
இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்தைகளுக்கும், வௌவால்களுக்குமா இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது? ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலையை அறிந்து செயற்பட வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.
முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத்தேர்தலை நடத்திப் பாருங்கள். அரசு மீது மக்களுக்குள்ள நம்பிக்கை என்னவென்பது தெளிவாகத் தெரியவரும்.
ஜே.ஆர். அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றார். ஆனால், அடுத்த தேர்தலிலேயே அக்கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 8 ஆகக் குறைந்தது. மக்களின் கோரிக்கை ஏற்கப்படாமையே இதற்குப் பிரதான காரணம் என்பதை தற்போதைய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.