மண்வெட்டியால் தாக்கி மகளைப் படுகொலைசெய்த தந்தை கைது!

காலி மாவட்டம், வாடுவெலிவிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர், தனது 33 வயது மகளை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ரெஷானி கோன்கஹகே என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ள தந்தை, தனது மகளின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார் என்றும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் பத்தேகம வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்றும் நாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து வன்முறையில் ஈடுபடுவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.