வங்கி லாக்கர் பாவனையாளர்களுக்கு புதிய நடைமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

வங்கி லாக்கரை பயன்படுத்த, அவற்றின் அளவிற்கேற்ப ஆண்டுக்கு 2000முதல் 8000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க வேண்டும். தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இந்த இழப்பீட்டை தர வேண்டும்.

பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை, வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும். வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

பாதுகாப்பு பெட்டகம் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான கொள்கைகளை வங்கி நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

நில நடுக்கம் வெள்ளம் மின்னல் புயல் போன்ற இயற்கைச் சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது. பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகள் குறித்த கால வைப்பு நிதியை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.

இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவர் 1 முதல் அமலுக்கு வருகிறது” இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.