சாதாரண காய்ச்சலை, கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி!
மங்களூர் : இந்தியாவில் சாதாரண காய்ச்சலை கொரோனா என தவறாக புரிந்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் வசித்து வருபவர்கள் ரமேஷ் மற்றும் சுவர்ணா தம்பதினர். ரமேஷ் லொரிகளை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் மங்களூரில் உள்ள பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்பதால் அவர்களின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால் அந்த தம்பதி அதற்குள் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கடிதத்தில் இறுதி சடங்குக்கு ஒரு லட்சம் ரூபாய் வைத்துள்ளதாகவும், தங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுமாறு எழுதிருந்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தது.
சாதரண காய்ச்சலை, கொரோனா என்று எண்ணி இவர்கள் தற்கொலை செய்து கொண்டது அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.