பிரதமர் மகிந்த அமைதியை களைய வேண்டும். : தமுகூ தலைவர் மனோ கணேசன்
பிரதமர் அவர்களே, தயவு செய்து உங்கள் அமைதியை களையுங்கள். 2005ம் ஆண்டு உங்கள் ஆட்சியில் “பேரிடர் மேலாண்மை சட்டம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த “பேரிடர் மேலாண்மை குழு” ஒன்றை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறை அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாங்கள் அல்ல, நீங்கள் கொண்டு வந்த சட்டம். அந்த சட்டத்தின் மூலம், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், 15 அரச அமைச்சர்களுடன் 5 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த குழுவாக இயங்கலாம். இந்த ஆளும், எதிர்க் கட்சிகள் இணைந்த இந்த “தேசிய பேரிடர் மேலாண்மை குழு” வின் மூலம், மக்கள் செத்து மடியும் இந்த தேசிய பேரிடரை சந்திப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
நான் இந்த சந்தர்ப்பத்திலே பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பிரதமர் அவர்களே, தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்று இதிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கின்றீர்கள். எழுந்து வாருங்கள். உங்கள் அரசாங்கத்தில், 2005ம் ஆண்டு “பேரிடர் மேலாண்மை சட்டம்” பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தை இன்று முன்னிலைப் படுத்துங்கள்.
ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த “பேரிடர் மேலாண்மை குழு”வை ஏற்படுத்தும் பொறிமுறை அந்த சட்டத்தில் உள்ளது. அந்த சட்டத்தின் மூலம், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், 15 அரச அமைச்சர்களுடன் 5 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த குழுவாக இயங்கலாம். அந்தக் குழு, “பேரிடர் மேலாண்மை குழு” என அழைக்கப்படும். இது ஆளும், எதிர்க் கட்சிகள் இணைந்த ஒரு தேசியக் குழு.
எதிர்க்கட்சி என்ற வகையில், நமது பிரதான ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மன் கிரியல்ல எதிர்க் கட்சிகளின் சார்பாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை முன்மொழிந்துள்ளார். நானும் அதில் உள்ளேன். அந்தக் குழு இதுவரை கூட்டப்படவில்லை. இதிலிருந்து இந்த அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது முழு நாட்டுக்கும் தெரிகிறது.
புதிதாக எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வர வேண்டியதில்லை. தற்பொழுது இருக்கின்ற சட்டத்தை, நீங்கள் கொண்டு வந்த சட்டத்தின் மூலமாவது ஆளும் எதிர்க் கட்சிகள் அடங்கிய தேசியக் குழு ஒன்றை அமைத்து, இந்த அழிவுக்கு, இந்த நெருக்கடிக்கு முகம் கொடுங்கள்.
தற்போது இந்த நாட்டில் நிகழ்வது மிகப் பெரிய குற்றச் செயல். ஏனெனில் பொறிமுறை ஒன்று இருந்தும், உபயோகப்படுத்தவதில்லை. சரியான நேரத்தில் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவில்லை. நாடு முடக்கப் படவில்லை. நாடு முழுவதிலும் உள்ள வர்த்தகர்கள் சுயவிருப்பின் பேரில் கடைகளை மூடும் போது, அதையும் எதிர்கட்சிகளின் சதி என அமைச்சர்கள் குறை கூறுகிறார்கள்.
நேற்று இந்நாட்டில் 171 மரணங்கள் பதிவாகின. அதுபோல கடந்த 7 நாட்களில் இறப்பு வீதம் 60 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. அத்துடன் மூன்று வகையான டெல்டா திரிபுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
தற்பொழுது அரசாங்கம் தடுப்பூசிகளை கொண்டு வந்து மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது சிறந்தது. எனினும், இது கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். ஆறு மாதங்கள் கடந்து விட்டன.
அர்ப்பணிப்புடன் செயல்படும் எமது மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள், தாதிமார், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவினருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அதுபோல் எமது இராணுவத்தினர் 24 மணி நேரமும் சேவை செய்கின்றனர். ஒருவர் மூன்று பேரின் பணிகளை மேற்கொள்வது எனக்குத் தெரிகிறது. இங்கே கொழும்பில் நான் அவர்களை பார்க்கிறேன். அர்ப்பணிப்புடன் பணிபுரிகிறார்கள். வேலை செய்யக் கூடியவர்கள் அடிமட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை, கடந்த ஜனவரி மாதமே பெற்றுக்கொடுத்திருந்தால், இன்று முழு நாட்டு மக்களுக்கும் தடுப்பூசிகளை அவர்கள் வழங்கி முடித்திருப்பார்கள்.
இன்று மரணங்களுக்கு முகம் கொடுப்பவர்களைப் பாருங்கள். 60 வயதுக்கு மேற்பட்டோரே அதிகமாக மரணமடைகின்றனர். இந்த அனைத்து மரணங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்புடன் இந்த குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு எதிராக நான் முன்வைக்கிறேன். எனவேதான் இதனை குற்றச் செயல் என நான் கூறுகிறேன். இது நியாயமற்ற செயல் என நான் கூற மாட்டேன். இதனை ஒரு கிரிமினல் குற்றச் செயல் என்றே நான் கூறுவேன்.
எனவே இனியாவது, இந்நிலையை கட்டுப்படுத்த தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தை ஏற்படுத்துங்கள். ஆனால் நீங்கள் செய்வதாக இல்லை. செயற்படும் வீரரின் அரசாங்கம் என ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் இயலாமை இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தம்மால் மட்டுமே முடியும் என அரசாங்கம் கூறுகிறது.
எதிர்க்கட்சியினரான நாங்கள் யோசனைகளை முன் வைக்கும் பொழுது அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அதேபோல அரசு புரிந்து கொள்ள முடியாததை, நாட்டின் வர்த்தக சமூகத்தினர், நாட்டு மக்கள் தாமாக முன்வந்து, புரிந்துகொண்டு, செயற்பட்டு வர்த்தக நிலையங்களை மூடுகின்றனர். இன்று வியாபாரம் இல்லை. வருமானம் இல்லை. தம்முடைய வேலையாட்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.
இவ்வாறான சூழ்நிலையிலும், நாட்டை நினைத்து, தாமாக முன்வந்து, வர்த்தக நிலையங்களை மூடும் போது, அதற்கும் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி என இந்நாட்டின் அமைச்சர்கள் வெட்கமில்லாமல் கூறுவதாக இருந்தால், இதை நான் தெய்வத்திடம் தான் முறையிட வேண்டும்.
உண்மையில் கொரோனா கட்டுப்படுத்தலை தெய்வத்திடம் பொறுப்பளிக்க வேண்டும் என சொன்ன ஒரு அமைச்சரிடம் சுகாதார அமைச்சு ஜனாதிபதியினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஜனாதிபதியும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை தெய்வத்திடமே ஒப்படைத்துள்ளார் எனத் தெரிகிறது. அத்துடன் தமது தோல்வியை இதன்மூலம் வெளிப்படையாகவே ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிகிறது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் ஒரு நீண்ட காகிதத்தை எடுத்துக் கொண்டு சில எண்ணிக்கைகளை தொடர்ச்சியாக கூறிக் கொண்டே சென்றார். அவர் ஐக்கிய மக்கள் சக்தியின், மக்கள் விடுதலை முன்னணியின், சுயாதீன தொழிற்சங்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை குறித்துக் கூறியிருந்தார். இவற்றின் மூலமாக இந்த நாட்டில் 30 லட்சம் பேரை வீதியில் இறக்கியதாகவும், இதன் மூலமே கொரோனா இந்த அளவுக்கு பரவியுள்ளது எனவும் கூறியிருந்தார்.
நான் அரசாங்கத்திற்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இது அல்ல உண்மை. இந்த அரசாங்கம்தான் நாட்டில் வாழும் 220 லட்சம் மக்களையும் ஆபத்தில் தள்ளி உள்ளது. நாங்கள் போராடியதால் தான், நாங்கள் சத்தமிட்டதால் தான், இப்பொழுதாவது இந்த தடுப்பூசிகளை அரசாங்கம் கொண்டு வந்தது. தடுப்பூசிகளை பெற்றுக் கொடுத்தது யார்? இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலவசமாகவும் தந்தன. அதேபோல மேலதிக தடுப்பூசிகளுக்கு வழங்கத் தேவையான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி, அமெரிக்கா, ஐநா ஆகியவை வழங்கின. நாங்கள் கூக்குரலிட்டதால் இவ்வாறானவை நடைபெற்றன.
எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச, 2020ஆம் ஆண்டு ஜனவரியில், உலகை அழிவுக்குள்ளாக்கும் கொவிட் பற்றி, அப்போது நாம் அதுபற்றி அறிந்திராத நேரத்திலேயே, எச்சரித்திருந்தார். விமான நிலையங்களை, துறைமுகங்களை மூட சொன்னார். பிப்ரவரி மாதமும் மீண்டும் கூறியிருந்தார். அரசாங்கம் இந்த பேச்சை கேட்டு நகைத்தது.
தற்பொழுது நாங்கள் நியூசிலாந்து குறித்துப் பேசுகிறோம். நியூசிலாந்து இன்று முழு உலகத்திற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. ஏனெனில், இலங்கையைப் போலவே இதுவும் ஒரு தீவாகும். தாய்வான் ஒரு தீவு. இந்த இரண்டு இடங்களிலும் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. நாமும் அவ்வாறான நிலையில் இருந்திருக்க முடியும். ஆனால் இன்று அவ்வாறான நிலை இல்லை. ஒப்பீட்டளவில் எமது நாட்டில் நிலைமை மிகவும் பாரதூரமாக உள்ளது. நியூசிலாந்து பாதுகாக்கப்பட்டதன் காரணம் விமான நிலையங்கள் மூடப்பட்டன, துறைமுகங்கள் மூடப்பட்டன. இந்த நாட்டிலும் முதலாவது நோயாளி அயல்நாட்டிலிருந்து வந்தவரே. எனவே அரசாங்கம் எவ்வாறான காரணங்களைக் கூறினாலும், தவறு செய்து விட்ட பொறுப்பினை ஏற்க வேண்டும்.
அரசாங்கம் பொருளாதாரத்தில் “ஃபெயில்”. சட்டம்-ஒழுங்கு துறையில் “ஃபெயில்”. இறுதியாக, இதிலும் “ஃபெயில்” ஆகியுள்ளது. இந்த “ஃபெயிலின்” காரணமாக ஒவ்வொரு நாளும் மக்கள் மரணமடைகின்றனர். அதுவே எமக்கு இருக்கும் பிரச்சினை. எனவே, தற்பொழுதுதாவது பொறிமுறையை பயன்படுத்தி, ஆளும், எதிர்க் கட்சிகள் அடங்கிய தேசிய குழு ஒன்றை ஏற்படுத்தி, இதனை மேலாண்மை செய்யுங்கள்.
நாங்கள் உத்தியோகபூர்வமாக கலந்துகொண்டு உங்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். அரசாங்கம் உங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் எதிர்க்கட்சி, எங்களால் யோசனைகளை முன்வைக்க முடியும். எனினும் செயற்படுத்த வேண்டியது, நீங்கள்.
திருட்டுத்தனமாகவோ, வெளிப்படையாகவோ, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துப் பேசி, தேநீர் குடித்து, அந்தப் புகைப்படங்களை ஊடகங்களில் பிரசுரித்து, இதோ எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வேலை செய்கிறோம் எனக் கூற வேண்டாம். ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னாள் பிரதமர்தான். அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் அவர் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி. எதிர்க்கட்சி தொடர்பில் பேசுவதற்கு சஜித் பிரேமதாஸ அவர்கள் தயாராக இருக்கிறார். ஆனால் உத்தியோகபூர்வ பொறிமுறையை உபயோகியுங்கள்,
நாங்கள் தற்போது பாராளுமன்றத்திலே பேசுகிறோம். யோசனைகளை முன் வைத்திருக்கிறோம். அது தொடர்பில் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆனால், உத்தியோகபூர்வ பொறிமுறை ஒன்று இருக்கும் போது இந்த அரசாங்கம் அதனை ஏற்படுத்தாமல் இருப்பது ஏன்? அதனைச் செய்ய வேண்டும். அதனைச் செய்யும் வரையில், அன்றைய தினம் வரை நடைபெறும் பொது மக்களின் மரணங்கள் என்ற குற்றச் செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்பினை ஏற்க வேண்டும். அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். இந்த அரசாங்கம், எமக்கு செவிசாய்த்து, ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருந்தால், நாடு முடக்கப்பட்டிருந்தால், இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டிருக்காது.