ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை (Video)
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன்.
தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.
எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.
எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது.
எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்.
இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.
இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும்.
அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும்.
நாட்டிலுள்ள முன்வரிசைச் சுகாதார ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கூட, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றியுள்ளோம்.
இதற்கு மேலதிகமாக, 30 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு மில்லியன் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
நாடு முழுவதிலும் மகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல், அரச சேவையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைத்தல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுத்தல், சில வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிடல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்துதல், மதஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்தல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளைத் தொடர்ந்தும் நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.
கொவிட் 19 தொற்றுப் பரவல் முதலாம் அலையின் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அதனை வெற்றிகரமாக முறியடிக்க எம்மால் முடிந்தது. அப்போதைய சந்தர்ப்பத்தில், அது தவிர வேறு வழிகள் இருக்காத பட்சத்திலேயே, அவ்வாறான தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.
அதனால், நாட்டை சில மாதங்களுக்கு முழுமையாக மூட நேர்ந்தது. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம், முதலாவது அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது.
நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட காலப்பகுதியானது, இந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த காலப்பகுதியாகும்.
விசேடமாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்றுறையானது, இதனால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டது.
அவர்களுக்கான ஏற்றுமதிக் கட்டளைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்றுமதி வருமானம் இழக்கப்பட்டது.
4.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருந்த சுமார் 3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுற்றுலாத்துறையும் முழுமையாக ஸ்தம்பித்தது.
இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டன.
அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட நாட்டை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக, நிர்மாணத்துறைத் தொழிற்றுறைகளுக்கும் பாரிய அடி விழுந்தது. அவர்களுக்குத் தேவையானளவில் ஊழியர்களை வரவழைத்து வேலைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தேவையான சந்தர்ப்பத்தில், மூலப்பொருட்களைத் தருவித்துக்கொள்ள முடியாமல் போனது.
இந்தத் துறைக்காக நாம் எதிர்பார்த்திருந்த தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் அனைத்தும், கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் இழக்க நேரிட்டது.
எமது தேசிய பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கான வருமானங்கள் இழக்கப்பட்டு, அவற்றை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட கடன்களையும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாமல், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. லீஸிங் முறைமையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களால் அதனைச் செலுத்த முடியாமல் போனது. வீட்டுக் கடன் பெற்றவர்களால், அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது.
இவை தவிர, 4.5 மில்லியனுக்கும் அதிகமான சுய தொழில்கள் மற்றும் நாளாந்தம் வருமானத்தைப் பெறுவோரின் வருமான வழிகள் என்பன முழுமையாக இல்லாமல் போயின. இதனால், அவர்களது வாழ்க்கை நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
இந்த அனைத்துவிதத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பு எமக்கு இருந்தது. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கவில்லை.
கொரோனா காரணமாக நாட்டை முடக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாளாந்த வருமானத்தை இழந்து நிர்க்கதிக்கு ஆளான மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்குவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில், பல தடவைகள் இந்தச் செலவை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் செலவுகளுக்கு மேலதிகமாக, தத்ததமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு, இரண்டு வாரக் காலத்துக்குத் தேவையான சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறோம்.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 1.4 மில்லியனாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.
எமக்கான அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதிலும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்டிருந்த கடன்கள் காரணமாக, வருடமொன்றுக்கு நாம், 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் தவணையாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அவற்றை, உரிய காலத்தில் செலுத்தியும் வருகின்றோம்.
நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும்.
அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது. நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்.
அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும்.
இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.
உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது.
இது, மாற்றுக் கருத்தாளர்கள், தொழிற்சங்கங்கள், வைத்தியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் போட்டியோ மோதலோ அல்ல. நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, இந்த முழு உலகமும் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினையாகும். இன்று ஒவ்வொரு நாடும், புதிய பொதுமைப்படுத்தல் முறைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்கின்ற போதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்களின் பொறுப்பில் இருக்கின்றது. அதேபோன்று, இதுவரை காலமும் தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை ஊழியர்களதும் சேவையை, நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அத்துடன், தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ள சுகாதாரத் துறையின் அனைத்துத் தரநிலை அதிகாரிகளுக்கும், நான் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.
இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்.
சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நமது நாட்டின் சிறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் பலர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். அதேபோன்று, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவுடன், உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டும்.
அத்துடன், இவ்வாறான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும்,
மும்மணிகளின் ஆசிகள்..!
ஜனாதிபதி ஊடகப் பிரிவு